நீட் தேர்வை தமிழில் நடத்தவே அதிமுக கோரியதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பியூஷ் கோயல் இதைத் தெரிவித்தார். அவர் மேலும், கூறியது:
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யாகண்ணு போன்றோர் பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். விவசாயிகள் விளைவிக்கும் 22 வகையான பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து அவர்களுக்கு உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு அதிக வருவாய் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற பாஜகவின் அறிவிப்புகளால் அகில இந்திய அளவில் அனைத்து விவசாய அமைப்புகளும் பிரதமர் நரேந்திர மோடியின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.
நீட் தேர்வு: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது வெற்றுக் கோஷமாகும். நீட் தேர்வை ரத்து செய்தால், ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்காத நிலை ஏற்படும். தமிழகத்தில் நீட் தேர்வை தமிழிலேயே நடத்த வேண்டுமென்றே அதிமுக கோரிக்கை விடுத்தது. தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். இந்தப் பிரச்னையில் அதிமுகவுடன் சமாதானம் பேசி ஒப்புக் கொள்ளச் செய்வோம்.
முன்பதிவில்லாத ரயில் பயணச் சீட்டுகளில் தமிழ் மொழியில் ஊர்ப் பெயர் உள்ளிட்ட விவரங்களை அச்சிடும் நடைமுறை கடந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுத்து ஒற்றுமையை நிலைநாட்ட பலமான வலிமையான தலைவர் தேவை.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோவை, மும்பையில் என்ன சம்பவங்கள் நடந்தன என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, மும்பையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பிறகு மத்தியில் இருந்த காங்கிரஸ்}திமுக கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இப்போது நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு பாஜக அரசு தனது துல்லிய தாக்குதல் நடவடிக்கைகள் மூலமாக பதிலடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர்
பியூஷ் கோயல் தெரிவித்தார்.