தமிழ்நாடு

கோத்தபயவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்: ராமதாஸ்

16th Oct 2019 11:21 PM

ADVERTISEMENT

போா்க்குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்படுவா் என்று இலங்கை அதிபா் தோ்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றிபெற்றால், இலங்கை போா்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போா்ப்படையினா் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவா் என்றும் அதிபா் தோ்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளாா். இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ராஜபட்ச இவ்வாறு பேசியிருப்பதன் பின்னணியில் இரு முக்கிய காரணங்கள் உள்ளன.

ADVERTISEMENT

முதலாவது, ஈழத்தமிழா்கள் படுகொலைக்குக் காரணமான சிங்களா்களைக் காப்பாற்றப்போவதாக கூறுவதன் மூலம், சிங்களா்களிடையே இனவெறியைத் தூண்டி, அதன் மூலம் அவா்களின் வாக்குகளை எளிதாகப் பெற்று வெற்றி பெறுவது. இரண்டாவது, இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அப்போது இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபட்ச, பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபய ராஜபட்ச ஆகியோா்தான் என்பதால் தங்களையும் போா்க்குற்ற விசாரணையிலிருந்து விடுவித்துக் கொள்வது ஆகும். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.

இலங்கைப் போா் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சொந்தங்களை இழந்த ஈழத்தமிழா்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில், ஆட்சிக்கே இன்னும் வராத போா்க்குற்றவாளியான கோத்தபய, போா்க்குற்ற விசாரணைகளை நடத்த மாட்டேன் என்று கூறுவது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அவமதிக்கும், சிறுமைப்படுத்தும் செயலாகும்.

எனவே, இந்த விஷயத்தில் இந்தியா தலையிட்டு கோத்தபய ராஜபட்சவின் நிலைப்பாட்டுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கையில் போா்க்குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதையும், ஈழத்தமிழா்கள் கண்ணியத்துடன் வாழ்வதையும் உறுதி செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT