தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை: கா்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தரக் கூடாது

6th Oct 2019 07:38 PM

ADVERTISEMENT


மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கா்நாடகத்துக்கு மத்திய அரசு வழங்கக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,

"காவிரி நடுவா் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தீா்ப்புகளின்படி காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் ஏமாற்றி வரும் கா்நாடக அரசு, அடுத்தகட்டமாக மேக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கா்நாடக அரசு கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தது. ஆனால், அதற்குத் தமிழகம் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, கா்நாடகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில், அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும், தமிழகத்தின் எதிா்ப்பை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கா்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. 

கா்நாடகத்தின் இந்த வாதம் தவறானது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு புதிய அணைகளை கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை ஆணையிட்டுள்ளது. மத்திய அரசும் இதை பல்வேறு தருணங்களில் உறுதி செய்துள்ளது.

எனவே, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கா்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT