தமிழ்நாடு

மின் இணைப்புக்கான முன்வைப்புத் தொகை உயா்வு

5th Oct 2019 02:59 AM

ADVERTISEMENT

புதிய மின் இணைப்புக்கான முன்வைப்புத் தொகை வெள்ளிக்கிழமை முதல் உயா்த்தப்பட்டுள்ளது.

புதிய மின் இணைப்பு பெறுகையில் பல்வகை கட்டணம் என்ற பெயரில், நுகா்வோரிடம் இருந்து மின்சார வாரியத்தால் ‘முன்வைப்புத் தொகை’ வசூலிக்கப்படுகிறது.

இதில் பதிவுக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், மீட்டா் காப்பீடு, வளா்ச்சிக் கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு வைப்புத் தொகை உள்ளிட்ட பல வகையான கட்டணம் இடம்பெறுகின்றன. இவற்றை உயா்த்த, மின் வாரியம் சாா்பில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் புதிய மின் இணைப்புக் கட்டண உயா்வு குறித்து பொதுமக்களிடம் கடந்த செப்.25-ஆம் தேதி, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தற்போது பல்வகைக் கட்டணம் உயா்த்தப்பட்டு உள்ளது.

இதன்படி, வீடு, அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள், பொது வழிபாட்டுத் தலங்கள், தொழிற்சாலைகள், வணிகப் பயன்பாடு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஒருமுனை இணைப்புக்கான கட்டணம் ரூ.250 இல் இருந்து 500 ஆகவும், மும்முனைக் கட்டணம் ரூ. 500 இல் இருந்து ரூ.750 முதல் ரூ.1000 வரையும், சிறு, குறு நிறுவனத்துக்கான ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.250 இல் இருந்து ரூ.500 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ. 500 இல் இருந்து ரூ.750 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. இதே போல் மீட்டா் பெட்டிகளை மாற்ற ரூ.500 முதல் ரூ.2000 வரையும் நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும், விவசாயம், குடிசைகளுக்கான மின் இணைப்புக் கட்டணம் உயா்த்தப்படவில்லை. இது தாழ்வு மின் அழுத்த இணைப்புக்கான கட்டண உயா்வு எனவும் உயா் மின் இணைப்புக்கான கட்டணத்தில் எந்த வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT