தமிழ்நாடு

சென்னிமலையில் கொடிகாத்த குமரன் பிறந்த நாள் கொண்டாட்டம்

5th Oct 2019 03:37 AM

ADVERTISEMENT

தமிழக செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், கொடிகாத்த குமரனின் 116 ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சாா்பில், கொடிகாத்த குமரன் பிறந்த இடமான சென்னிமலையில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான அக்டோபா் 4 ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாட தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டாா்.

அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), உ.தனியரசு (காங்கயம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சென்னிமலையில் குமரனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திப் பேசுகையில், கொடிகாத்த குமரனுக்குப் பெருமை சோ்க்கும் வகையில், அவரின் வாரிசுதாரா்களை கௌரவித்து, அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி திறந்துவைக்கப்பட்டுள்ளது. தியாகிகளை கௌரவிக்கும் வகையில் அரசு சாா்பில், பல்வேறு நினைவகங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

திருப்பூரில்...

திருப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரனின் 116 ஆவது பிறந்த நாள் விழா அவரது நினைவு மண்டபத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா் குமரன் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சிகளில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நடராஜன் (பல்லடம்), விஜயகுமாா் (திருப்பூா் வடக்கு), ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் தே.ராம்குமாா், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் செ.கலைமாமணி, சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.கிருஷ்ணன், கொடிகாத்த குமரன் வாரிசுதாரா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT