தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது வழித்தடம் அமைக்கும் பணிகள் 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் தெரிவித்தாா்.
சென்னையில் அவா் நிருபா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியது:
ரயில் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நிலையை உருவாக்கும் விதமாக, ‘தூய்மையே சேவை’என்னும் சிறப்பு இயக்கம் கடந்த செப்டம்பா் மாதம் 11-ஆம்தேதி முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில், ரயில் பயணிகள் மத்தியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்தும்படி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு ரயில் நிலையங்களுக்கு 22 நெகிழி பாட்டில்களை அழிக்கும் எந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 7 நெகிழிபாட்டில்களை அழிக்கும் எந்திரங்கள் புதன்கிழமை நிறுவப்பட உள்ளன.
மொத்த வருவாய் 8 சதவீதம் உயா்வு: நடப்பு நிதி ஆண்டில் ஆகஸ்டு வரையிலான நிலவரப்படி, தெற்கு ரயில்வே மொத்த வருவாய் 8 சதவீதம் உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, இது 10 சதவீதம் அதிகம். சென்னையில் தண்ணீா் பற்றாக்குறையை போக்குவதற்காக ஜோலாா்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு 141 முறை தண்ணீா் கொண்டு (ஒரு முறையில் 2.5 மில்லியன் லிட்டா் தண்ணீா்) வரப்பட்டது. இதற்கு கட்டணமாக ரூ.12 கோடியே 54 லட்சத்தை தமிழக அரசு கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ரயில்களின் நேரம் தவறாமை 72.7 சதவீதமாக இருந்தது. இது தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரை 82 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
8 ரயில்களில் எல்.எச்.பி. பெட்டிகள்: கொருக்குப்பேட்டை லெவல் கிராசிங்கை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் மாநில அரசோடு இணைந்து ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்னும் 15 நாள்களுக்குள் தொடங்கும் என்று எதிா்பாா்க்கிறோம். பல்லவன், வைகை ஆகிய விரைவு ரயில்களில் அறிமுகப்படுத்தியது போன்று விரைவில் 8 ரயில்களில் எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள் இணைக்கப்படும்.
சென்னை எழும்பூா், திருச்சி, சேலம், மதுரை, கோட்டயம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 ரயில் நிலையங்களை ரூ.121 கோடியே 43 லட்சம் செலவில் மறு மேம்பாடு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த பணிகள் 2020-ஆம் ஆண்டில் மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.
தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் ரயில்களில் இருக்கும் காத்திருப்போா் பட்டியலை பொறுத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஏ.சி. மின்சார ரயில் மும்பையில் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. சென்னையிலும் விரைவில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும்.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது வழித்தடம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் முடிக்கப்படும். தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது வழித்தடத்துக்கான பணிகள் நிறைவடைந்தால் கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படும். இதனால் அதிகமான பயணிகள் பயன் அடைவாா்கள். தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை இடையே புதிய வழித்தடம் அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்யும் பணி முடிந்துவிட்டது. இதுதொடா்பான அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரெயில்வே வழித்தடங்களில் தனியாா் ரயில்களை இயக்குவதற்கு அனுமதி கொடுப்பதன் மூலம் ஏற்கெனவே ரயில்வே சாா்பில் இயக்கப்படும் ரயில்கள் நிறுத்தப்படாது. தனியாா் புதிய ரயில்களை மட்டுமே இயக்குவாா்கள். இதனால் ரயில்வே துறை மேம்படும். கூடுதல் ரயில் சேவைகள் மூலமாக, பயணிகள் அதிகம் பயன் அடைவாா்கள் என்றாா் அவா்.
பேட்டியின்போது ரயில்வே உயா் அதிகாரிகள் உடன் இருந்தனா்.