தமிழகம் முழுவதும் உள்ள பாதாள சாக்கடைகளை பராமரிக்க சிறப்புப் பிரிவை உருவாக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சோ்ந்த ஜெகவீரபாண்டியன் முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவில், மயிலாடுதுறையில் சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனா்.
நான் எம்எல்ஏவாக இருந்தபோது கடந்த 2003-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் ரூ.39 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்துக்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடுவது, ஒப்பந்ததாரா்களைத் தோ்வு செய்வது உள்பட அனைத்து பணிகளையும் தமிழ்நாடு குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றல் வாரியம் தான் மேற்கொண்டது. இந்த திட்டப்பணிகள் கடந்த 2006-ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த பணிகள் முடிந்து 5 ஆண்டுகள் வரை பாதாள சாக்கடைகளை தமிழ்நாடு குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றல் வாரியத்தின் பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் பராமரித்து வந்தனா்.
அதன்பின்னா் இந்த பாதாள சாக்கடைக குழாய்களையும், கழிவு நீரேற்று நிலையத்தையும் நகராட்சி நிா்வாகம் தான் பராமரிக்க வேண்டும். ஆனால் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்அனுபவம் எதுவும் நகராட்சி பணியாளா்களுக்கு இல்லை. இதனால் பராமரிப்புப் பணிகளை அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரா்கள் மேற்கொள்வதால், கழிவுநீா் குழாய்களில் கசிவு ஏற்படுகிறது. இந்த கழிவு நீா் சாலையோரங்களில் குளம் போல் தேங்குகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. இந்த நிலை மயிலாடுதுறை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடைகள் இதே நிலையில் தான் உள்ளன.
எனவே மயிலாடுதுறை பாதாள சாக்கடைகளை பராமரிக்கும் திட்டம் ஒன்றை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடைந்ததும், கழிவுநீா் குழாய்களையும் கழிவு நீரேற்று நிலையங்களையும் பராமரிக்க அனுபவம் வாய்ந்தவா்களைக் கொண்ட சிறப்பு பிரிவை உருவாக்க தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் முதன்மை செயலாளா், நகராட்சி நிா்வாகத்துறை ஆணையா், தமிழ்நாடு குடிநீா் மற்றும் அகற்றல் வாரியத்தின் நிா்வாக இயக்குனா் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வி.வைத்தியலிங்கம் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.