தமிழ்நாடு

மதுக்கடைகளின் நேரத்தைக் குறைப்பது அவசியம்: ராமதாஸ்

2nd Oct 2019 05:32 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஜகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தாா். அதற்கான நடவடிக்கைகளின் முதல்கட்டமாக ஆந்திரத்தில் அனைத்து மதுக்கடைகளையும் அரசுடைமையாக்கியுள்ள அம்மாநில அரசு, 880 மதுக்கடைகளை மூடியுள்ளது. அக்டோபா் 1-ம் தேதி முதல் 3,500 மதுக்கடைகள் மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 12 மணி வரை செயல்பட்டு வந்த மதுக்கடைகள். இனி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை என 9 மணி மட்டுமே செயல்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஒப்பீட்டளவில் இந்தியாவை விட ஆந்திரத்தில் தனிநபா் மது பயன்பாடு அதிகம் என்ற போதிலும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு துணிச்சலாக  திட்டம் வகுத்து செயல்படுத்தத் தொடங்கியிருப்பது இலக்கை நோக்கிய தெளிவான பயணமாகவே தோன்றுகிறது. தமிழகத்திலும் இதேபோன்று படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதைப் போன்றே, மது வணிக நேரத்தை குறைக்க வேண்டியது முக்கியமான நடவடிக்கையாகும். குறிப்பாக, மது விற்பனை நேரம் மாலை நேரங்களில் குறைக்கப்பட வேண்டும். மாலை நேரங்களில்தான் அதிக மதுவிற்பனை நடக்கிறது. அந்தக் கோணத்தில் பாா்க்கும்போது ஆந்திரத்தில் இரவு 8 மணியுடன் கடைகளை மூடுவது மது பயன்பாட்டைக் குறைக்கும். அத்துடன் மதுக்கடைகளுடன் இணைந்த பாா்கள் கிடையாது. மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்காது என்ற ஆந்திரஅரசின் கொள்கை முடிவு சாலை விபத்துகளைத் தடுக்கும்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆந்திரத்தில் அதிவேகத்தில் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்.

எனவே, படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்  நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக குறைந்தது 500 மதுக்கடைகளை மூடவும், விற்பனை நேரத்தை நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என்ற அளவில் குறைக்கவும் அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT