தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(அக்.3) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வட வானிலை காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக்.3) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, கோயம்புத்தூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் ஓரளவு மேக மூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு:புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 70 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையம், சின்னக்கல்லூரில் தலா 50 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் நிலகோட்டையில் 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, சேலம் மாவட்டம் ஏற்காடு, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.