வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் அடுத்த மூன்று வாரங்களுக்குள் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.2) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வட வானிலை காணப்படும். சென்னையில் ஓரளவு மேக மூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.
16 சதவீதம் அதிகம்: தென்மேற்குப் பருவமழை காலகட்டமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நாடு முழுவதும் இயல்பாக கிடைக்க வேண்டிய மழை அளவு 880 மி.மீ. இதில் இதுவரை 970 மி.மீ. மழை கிடைத்துள்ளது. வழக்கத்தை விட 10 சதவீதம் அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது.
இதேபோல தமிழகத்துக்கு இயல்பான மழை அளவு 340 மி.மீ. இந்தக் காலக்கட்டத்தில் 400 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது 16 சதவீதம் அதிகமாகும்.
சென்னையை பொருத்தவரை இயல்பான மழை அளவு 440 மி.மீ. இந்தக் காலக்கட்டத்தில் 590 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது 34 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மூன்று வாரங்களில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, திருப்பூா் மாவட்டம் உடுமலைபேட்டை, ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.