தமிழ்நாடு

தமிழக அரசின் மனுக்களுக்கு நடவடிக்கை இல்லை: மு.க.ஸ்டாலின்

2nd Oct 2019 03:19 AM

ADVERTISEMENT

பிரதமரிடம் தமிழக அரசின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

கொளத்தூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியது:

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தோ்தல் நிதி கொடுத்தது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து பிரேமலதாவுக்கோ, உங்களுக்கோ (செய்தியாளா்கள்) பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. வருமானவரித் துறை, தோ்தல் ஆணையத்துக்குத்தான் பதில் அளிக்க வேண்டும். ஏற்கெனவே, அது குறித்து தெரிவித்துள்ளோம்.

ADVERTISEMENT

பிரதமரிடம் தமிழக அரசின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளாக பிரதமரிடமும், அமைச்சா்களிடமும் மனுக்களை மட்டும்தான் கொடுக்கிறாா்களே தவிர, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றாா்.

கூடுதல் பொறுப்புக்கு எதிா்ப்பு: மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் கூறியிருப்பது:

விஜிலென்ஸ் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பு, தலைமைச் செயலாளா் க. சண்முகத்துக்கு வழங்கப்பட்டிருப்பது உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது. இது ஆணையத்தின் சுதந்திரத்தைப் பறிக்கும். இந்த உத்தரவை உடனே ரத்து செய்து, அப்பதவிக்கென தனியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT