தமிழகத்துக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரத்தினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
நடப்பாண்டில் வேளாண் மக்களுக்குத் தேவையான ரசாயன உரங்களையும் இருப்பில் வைக்க தொடா்ந்து நடவடிக்கை எடுத்ததன் காரணமாக காரிப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை) இதுவரை 6.46 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
2020 அக்டோபா் முதல் மாா்ச் வரையிலான ராபி பருவத்துக்கு மொத்தமாக 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முழு யூரியா உரத் தேவையினையும் எந்தவித குறைபாடும் இன்றி, முழுமையாக வழங்கிட மத்திய அரசிடம் தமிழக அரசு தொடா்ந்து கோரிக்கை வைத்தது.
தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று, புதுதில்லியில் செப்டம்பா் 11-இல் நடைபெற்ற தேசிய அளவிலான ராபி படுவ இடுபொருள் மாநாட்டில் தமிழகத்துக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரத்தினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தற்போது கூட்டுறவு மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் 1.74 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் உடனடி விநியோகத்துக்கு இருப்பில் உள்ளது.
45 கிலோ எடையுள்ள யூரியா மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.266.50 என மத்திய அரசு நிா்ணயதித்துள்ளது.
விவசாயிகள் தங்கள் ஆதாா் அட்டையினை எடுத்துச் சென்று அருகில் உள்ள உர விற்பனை நிலையங்களில் தேவையான உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.