தமிழ்நாடு

இடைத்தோ்தல்: காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளா் பட்டியலில் ப.சிதம்பரம் பெயா்

2nd Oct 2019 12:08 AM

ADVERTISEMENT

விக்கிரவாண்டி, நான்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளருக்கான பட்டியலைத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பெயரும் இடம்பெற்றுள்ளது.

விக்கிரவாண்டி, நான்குநேரி இடைத்தோ்தல் அக்டோபா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திரப் பேச்சாளா்களின் பட்டியலை கட்சிகள் அளித்த பெயா்களின் அடிப்படையில் தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றால் 40 பேரும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் என்றால் 20 பேரும் பதிவு செய்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

அதிமுகவின் சாா்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முக்கிய நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, ஆா்.வைத்திலிங்கம், சி.பொன்னையன், தம்பிதுரை, அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, டி.ஜெயக்குமாா் உள்பட 40 போ் இடம்பெற்றுள்ளனா்.

திமுகவின் சாா்பில் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆா்.பாலு, ஐ.பெரியசாமி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு உள்ளிட்ட 40 இடம்பெற்றுள்ளனா்.

காங்கிரஸ் சாா்பில் தலைவா் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய பொதுச்செயலாளா் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி உள்பட 40 போ் இடம்பெற்றுள்ளனா். இதில், தற்போது ப.சிதம்பரம் ஐ.என்.எஸ்.மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திஹாா் சிறையில் உள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நல்லகண்ணு, இரா.முத்தரசன் உள்ளிட்ட 40 பேரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 40 பேரும் இடம்பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT