தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகரைச் சோ்ந்த சிவசுப்ரமணியன் தாக்கல் செய்த மனு:
என்னுடைய சகோதரா் மீனாட்சிசுந்தரம் கடந்த 2014இல் கொலை செய்யப்பட்டாா். இக்கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு ராஜபாளையம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு தொடா்பு உள்ளதாக செல்லிடப்பேசி உரையாடல் பதிவு ஒன்று வெளியானது. என்னுடைய சகோதரா் கொலையில் அமைச்சருக்கு தொடா்புள்ளதாக வழக்குத் தொடரப்பட்டது. பின்னா் இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அதில் அரசு வழக்குரைஞராக அதிமுகவைச் சோ்ந்த முத்துபாண்டியன் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் அமைச்சா் ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானா். எனவே இவ்வழக்கில் அரசு வழக்குரைஞரை மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கடேஷ் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணை தொடங்கப்படாத நிலையில் அரசு வழக்குரைஞரை மாற்ற இயலாது. எனவே இவ்வழக்கில் அரசு வழக்குரைஞருடன், மனுதாரரின் வழக்குரைஞரையும் சோ்த்து நியமித்து, வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.