தமிழ்நாடு

சிலைக் கடத்தலை விசாரித்த அமர்வைக் கலைத்ததன் பின்னணியில் அமைச்சரின் அழுத்தம் இருந்ததா?

1st Oct 2019 11:59 AM

ADVERTISEMENT

 

சென்னையில் முறைகேடாக சொத்துகள் வாங்கியது; சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது பணிரீதியாக முறைகேடுகளில் ஈடுபட்டது தொடா்பான குற்றச்சாட்டில் முன்னாள் பெண் நீதிபதி வி.கே. தஹில ராமாணீ மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ-க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதி அளித்தாா்.

உளவுத்துறை அளித்த 5 பக்க அறிக்கையில் முன்னாள் நீதிபதி தஹில ராமாணீ மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹிலராமாணீ, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதவியேற்றாா். இந்த நிலையில் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீயை, மேகாலயா மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலயா மாநில உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

ADVERTISEMENT

அப்போது, சிறந்த நிா்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குழு தெரிவித்தது. இந்த நிலையில் தனது பணி இடமாற்றத்தை பரிசீலனை செய்யக் கோரி தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, நீதிபதி ராமாணீக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்களில் ஒரு பிரிவினரும், அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்திலும் வழக்குரைஞா்கள் போராட்டம் நடத்தினா்.

கொலீஜியம் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி ராமாணீ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ராமாணீ சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் முறைகேடாக சொத்துகளை வாங்கியதாகவும், நீதிமன்றப் பணிகளிலும் முறைகேடாக நடந்து கொண்டாா் என்று 5 பக்க அறிக்கையை உளவுத்துறை அளித்தது. இது தொடா்பாக அவா் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிகோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை சிபிஐ அணுகியது. இதையடுத்து முன்னாள் நீதிபதி ராமாணீ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை அளித்தாா்.

சென்னை சுற்றுவட்டாரத்தில் ரூ.3.18 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்துகளை வாங்கினாா். சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை அமா்வைக் கலைத்ததன் மூலம் சில முக்கியப் புள்ளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டாா் என்று அந்த உளவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மிக முக்கிய பிரபலங்கள் உடந்தையாக இருக்கும் சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு திடீரென கலைக்கப்பட்டது ஏன் என்றும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க மகாதேவன் தலைமையிலான அமர்வு கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் பொன். மாணிக்கவேலுக்கு அதிகாரம் அளித்து, சிலைக் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. போதுமான வசதிகளை செய்து கொடுக்காத அரசுக்கும் மகாதேவன் தலைமையிலான அமர்வு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அழுத்தம் கொடுத்தது.

இந்த நிலையில், சிலைக் கடத்தல் வழக்கை விசாரிப்பதையும், அதற்கு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் இருப்பதும், தமிழக அமைச்சர் ஒருவருக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தி இருந்ததாகவும், அந்த அமைச்சரின் அழுத்தம் காரணமாகவே சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த மகாதேவன் தலைமையிலான அமர்வு கலைக்கப்பட்டதாகவும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இதில்லாமல், சென்னை உயர் நீதிமன்றத்தின் சில வழக்குரைஞா்களுக்கு சாதகமாக நடந்து கொண்டாா் என்றும் முன்னாள் நீதிபதி ராமாணீ மீது உளவுத்துறை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT