தமிழ்நாடு

நான் போலீஸ் இல்லை.. பொறுக்கி..? காவல்துறை அலப்பறைகள்!

1st Oct 2019 03:34 PM | C.P.சரவணன், வழக்குரைஞர்

ADVERTISEMENT

 

ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து, பொதுமக்களிடையே அமைதி நிலவினால் தான், அம்மாநிலம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக கருதப்படுகிறது. 

இதற்கு, காவல்துறையின் பணி சிறப்புடையதாக இருக்க வேண்டும். மத்திய அரசுகளே உள்துறையை பிரதமர் வசம் வைத்துக் கொள்வதில்லை. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, யார் முதல்வர் ஆகிறாரோ, அவர்களே தங்கள்வசம் காவல்துறை வைத்திருப்பது தொடர்கதையாக உள்ளது. 

ஆனால், யாருக்கு பிரயோஜனம் என்பதே கேள்வி கடந்த 2017, ஜூன் மாதத்தில் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய ஈஸ்வரி என்ற பெண்ணை தாக்கிய போலீஸ் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

அதன்பின், மார்ச் 07,  2018 இல் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி உஷாவுடன் , மாலை 6.30 மணி அளவில் தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்தார். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர் அதனை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜீப்பை எடுத்துக்கொண்டு ராஜாவின் மோட்டார் சைக்கிளை பின்னால் விரட்டிச் சென்று எட்டி உதைத்தார். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷா படுகாயம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் கலைந்து ரத்தம் வெளியேறி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அதன்பின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பணி ஆணை பெற்று பணியில் சேர்ந்து விட்டார்.

செப்டம்பர் 30, 2019 நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ்(வயது50) என்பவர் கண்டக்டராக இருந்தார். அந்த பஸ்சில் பாளை ஆயுதப்படை போலீசார் தமிழரசன், மகேஸ்வரன் ஆகிய இருவரும் கைதி ஒருவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் வாரண்ட் தருமாறு கண்டக்டர் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வாரண்டை கொடுக்கவில்லை. மூன்றடைப்பு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது போலீஸ்காரர்களில் ஒருவர் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார். இதில் கண்டக்டருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதனை பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கண்டக்டர் ரமேஷ் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தான் தாக்கப்பட்டது குறித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்கள் மீது கண்டக்டர் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் தமிழரசன் மற்றும் மகேஸ்வரன் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தார்.

காவல்துறையினர் தவறு செய்யும் போது கைது நடவடிக்கை இருக்கிறதே ஒழிய அதன் பின் பதவி உயர்வுகளும், பணி இடமாற்றமும் செய்யப்பட்டு சௌகரியமாக இருக்கிறார்கள். சிறு வழக்குகள், ரூட் தல பிரச்னையில் பிடிக்கப்படும் கைதிகள் பாத் ரூமில் வழுக்கி விழுகிறார்கள். சுபஸ்ரீ பேனர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயபால் பாத் ரூமில் ஏன் வழுக்கி விழவில்லை என்ற கேள்வி மக்களிடம் உள்ளது.

போக்குவரத்து போலீசார் தினமும் ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் செய்கிற சட்டமீறல் கெடுபிடிகள் மக்கள்  விரோதமாக உள்ளது. சாமி படத்தில் வரும் ”நான் போலீஸ் இல்லை பொறுக்கி” வசனத்தை நினைவுபடுத்தும் வகையில் காவலர்கள் பண்பு குறைந்து வருவது கண்டிக்கத்தக்கது. காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் நிச்சயம் இந்த விஷயத்தில் தலையிட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை போக்குவார் என்று நம்புவோம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT