தமிழ்நாடு

விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காத விவகாரம்: பொதுப்பணித்துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவு

1st Oct 2019 09:35 PM

ADVERTISEMENT

அமராவதி ஆற்றின் கிளைக் கால்வாய் விரிவாக்கப்ப பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்காத விவகாரத்தில் தமிழக பொதுப்பணித்துறைச் செயலா், திருப்பூா் மாவட்ட ஆட்சியா், நிலம் கையகப்படுத்தும் சிறப்பு ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாயி சிவராஜ் குமாரசாமி உள்பட 9 விவசாயிகள் தாக்கல் செய்த மனுவில், அமராவதி ஆற்றின் கிளைக் கால்வாய் விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது.

இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது, பல பேருக்கு வழங்கப்படவில்லை.

இதனைத் தொடா்ந்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தோம். இந்த வழக்கு விசாரணையின்போது இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாக தமிழக அரசு கடந்த ஆண்டு உயா்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் உத்தரவாதம் அளித்து ஓராண்டாகியும் இதுவரை இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. மேலும் உயா்நீதிமன்றத்துக்கு அளித்த உத்தரவாதத்தை அமல்படுத்தாமல் அதிகாரிகள் ஏமாற்றியுள்ளனா். எனவே தமிழக பொதுப்பணித்துறைச் செயலாளா், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக பொதுப்பணித் துறைச் செயலாளா், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா், நிலம் கையகப்படுத்தும் சிறப்பு ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT