தமிழ்நாடு

113 வயதில் மிட்டாய் வியாபாரம் செய்து வரும் மிட்டாய் தாத்தா

1st Oct 2019 10:08 AM | C.P.சரவணன்

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில், 113 வயதில் மிட்டாய் வியாபாரம் செய்து வரும் மிட்டாய் தாத்தாவுக்கு, முதியோர் உதவித் தொகையான மாதம் ரூ 1,000 கொடுப்பதற்கான ஆணை, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

தஞ்சாவூரில், 113 வயதில் சொந்தமாக மிட்டாய் தயார் செய்து பல கிலோ மீட்டர் நடந்தே சென்று விற்பனை செய்து வருவதுடன், அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக்கொண்டு உடலிலும் மனத்திலும் எந்தக் குறையும், நோயும் இல்லாமல் வாழ்ந்துவரும் மிட்டாய் தாத்தா

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையின் கவனத்திற்குச் சென்றது. அவருடைய உத்தரவின் பேரில், தஞ்சை தாசில்தார் வெங்கடேஷ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரகுராமன் ஆகியோர் நேற்று மிட்டாய் தாத்தா தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று விசாரித்தனர்.

ADVERTISEMENT

அதன்பிறகு, இன்று மிட்டாய் தாத்தா கார் மூலம் தாசில்தார் அலுவலகம் அழைத்துவரப்பட்டார். அங்கு, அவருக்கு மாதம் 1,000 ரூபாய் முதியோர் உதவித் தொகைக்கான ஆணையின் நகல் கொடுக்கப்பட்டது. மேலும், இன்னும் 10 தினங்களில், ரேஷன் கார்டு கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இவற்றைப் பெற்றுக்கொண்டு, முகம் முழுக்க புன்னகையுடன் வெளியே வந்த மிட்டாய் தாத்தா, தன்னுடைய டிரேட் மார்க்கான குரலில் `மிட்டாய்... மிட்டாய்' என உற்சாகத்துடன் கத்தினார்.

இதுகுறித்து மிட்டாய் தாத்தா என்றழைக்கப்படும் முகமது அபு சாலியிடம் பேசினோம். ``நான் தஞ்சாவூர் ஆடக்காரத் தெருவில் வசித்து வருகிறேன். என்னுடைய 50வது வயதில் பர்மாவில் இருந்து தஞ்சாவூர் வந்தேன். இன்று எனக்கு 113 வயதாகிறது. முதலில் டீ கடையில் வேலைபார்த்தேன். பின்னர், மிட்டாய் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினேன். தேங்காய், இஞ்சி, குளுக்கோஸ் மிட்டாய்களை நானே தயாரிப்பேன். தஞ்சையின் பல பகுதிகளுக்கு நடந்தே சென்று விற்பனைசெய்வேன். அடி வயிற்றில் இருந்து குரல் எழுப்பி, `மிட்டாய் மிட்டாய்' என கத்தித்தான் விற்பனைசெய்வேன்.

அப்படி கத்தினால்தான் குழந்தைகளை ஈர்க்கும். மிட்டாய் வாங்கி கொடுக்கும் பெற்றோர்களிடம் இதன்மூலம் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகளைச் சொல்லுவேன். குழந்தைகள் காசு இல்லை என்றாலும் கொடுத்துவிடுவேன். எனக்கு குழந்தைகளின் மகிழ்ச்சிதான் முக்கியம். இதில் சொற்ப வருமானம்தான் கிடைக்கும். ஆனாலும் இதைத் தொடர்ந்து செய்துவந்தேன்.

என்னைப் பொறுத்தவரை திருடக்கூடாது. பொய் பேசக்கூடாது. யாரையும் கெடுக்கக்கூடாது என்ற கொள்கையில் வாழ்ந்து வருபவன். அதனால்தான் இந்த வயதிலும், உடலிலும் மனத்திலும் எந்தக் குறையும், நோயும் இல்லாமல் வாழ்கிறேன். எனக்கு 113 வயசாகிறது என்றால் பலர் நம்ப மாட்டார்கள். அவர்களிடம் 'எதற்கும் கவலைப்படாமல் சிரித்துகொண்டே இருங்கள், நீங்களும் என்னைப்போல் இருக்கலாம்' எனக் கூறுவேன்.

என்னைப் பற்றி செய்தி வெளியான பிறகு, தாசில்தார் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வந்து விசாரித்தனர். பின்னர், இன்று காலை கார் அனுப்பிவைத்து, என்னை தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு, எனக்கு மாதம்தோறும் முதியோர் உதவித்தொகை 1,000 ரூபாய் கிடைப்பதற்கான ஆணை வழங்கினர். மேலும், 10 நாள்களில் ரேஷன் கார்டு கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினர். எனக்கு ரொம்ப சந்தோஷம்.
இத்தனை வருஷ வாழ்கையில், எனக்கான அடையாளம் இப்பதான் கிடைத்திருக்கு. எப்போதும் மிட்டாய் விற்பதை மட்டும் நிறுத்த மாட்டேன்.

இவைதான் என்னுடைய முகவரி. எனக்கு வாழ்கையில் இனிப்பு கிடைப்பதற்கு வித்தாக இருந்த விகடனுக்கு நன்றி. எல்லோரும் நல்லா இருக்கணும். அதுதான் என் ஆசையும், ஆசியும்" என மனமும் முகமும் மலர வெடிச்சிரிப்புடன் தெரிவித்தார், மிட்டாய் தாத்தா.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT