இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பு அவர்களுக்கானது என்றும் அவர் கூறினார்.
சென்னை ஐஐடி-யின் 56-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கிய பிரதமர் மோடி, விழாவில் பேசியதாவது: பெற்றோரின் தியாகமும், ஆசிரியர்களின் ஓய்வில்லா உழைப்பும் மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்குகிறது. மாணவர்களின் வெற்றியில் அவர்களுக்கு உயர்ந்த பங்குள்ளது.
நாம் இன்றைக்கு உலகின் மூத்த மொழியான தமிழ் பேசக் கூடிய மாநிலத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். அதுபோல, சென்னை ஐஐடி இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, இங்கு பட்டம் பெறும் நீங்கள் சிறந்த மாணவர்களாக மட்டுமின்றி, சிறந்த குடிமக்களாகவும் இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் இந்திய மக்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் உலக அளவில் இந்தியர்கள்தான் முன்னிலையில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஐஐடி-யில் படித்தவர்கள்தான். அண்மையில், அமெரிக்காவில் பல நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் இந்தியா குறித்து புதிய எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக, இந்திய இளைஞர்கள், இளம்பெண்கள் மீது ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்ப்புடன் உள்ளது.
இந்தியா 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார நாடாக ஆவதற்கு முனைப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த முயற்சிக்கு, உங்களைப் போன்ற இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்.
21-ஆம் நூற்றாண்டின் தேவையை அறிந்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியை முதலில் தொடங்கியது சென்னை ஐஐடி தான். செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம் போன்றவை பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் உருவாக்கப்படும் இந்தியாவின் தனித்துவமான கண்டுபிடிப்புகள் சர்வதேச சந்தையில் உரிய இடத்தைப் பெற வேண்டும்.
அதைக் கருத்தில்கொண்டுதான், மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் முக்கியக் கல்வி நிறுவனங்களில் அடல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதுமட்டுமன்றி, மாணவர்களின் கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்தவும் மத்திய அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தாய்நாட்டை மறக்கக்கூடாது: மாணவர்கள் எங்கு வசித்தாலும், பணியாற்றினாலும் தாய்நாட்டை மறந்துவிடக்கூடாது.
உங்களின் கண்டுபிடிப்புகள் தாய்நாட்டிற்கும், இந்திய சகோதரர்களுக்கும் உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றார் பிரதமர்.
விழாவில் முன்னதாக, சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, ஐஐடி-யின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோர் பங்கேற்றனர்.