தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: வாணியம்பாடி மாணவரின் தந்தையிடம் சிபிசிஐடி விசாரணை: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையருக்கு சம்மன்

1st Oct 2019 03:25 AM

ADVERTISEMENT

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவரின் தந்தையான மருத்துவர் முகமது சபியிடம், சிபிசிஐடி போலீஸார் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகாரில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவரான சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கேடசன் ஆகியோர், கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி  கைது செய்யப்பட்டனர். 
அதையடுத்து, இதே வழக்கில் தொடர்புடைய சென்னை மாணவர்களான பிரவீண், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோரை, சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரித்தனர். இதில், மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தை மாதவன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற உத்தரவின்படி, உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர், மதுரை மத்திய சிறையிலும், பிரவீண், அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் தேனி மாவட்டச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் தொடர்புடைய தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவரான வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான் என்பவர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரது தந்தை வாணியம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் முகமது சபியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, ஞாயிற்றுக்கிழமை இரவு தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். 
இங்கு, முகமது சபியிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இரு இடைத்தரகர்களுக்கு தொடர்பு: மருத்துவர் முகமது சபியிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு வாணியம்பாடியைச் சேர்ந்த வேதாச்சலம் என்பவர் மூலம் கேரளத்தைச் சேர்ந்த ரஷீத் என்ற இடைத்தரகருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், முகமது சபி மூலம், சென்னை மாணவர் உதித் சூர்யாவின் தந்தையான மருத்துவர் வெங்கடேசனுக்கு இடைத்தரகருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவர் வெங்கடேசனின் மூலம், மாணவர்கள் பிரவீணின் தந்தை சரவணன், ராகுலின் தந்தை டேவிஸ் ஆகியோருக்கு இடைத்தரகருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 
இந்த விவகாரத்தில் இடைத்தரகர் ரஷீத்துடன், கேரளத்தைச் சேர்ந்த மற்றொரு இடைத்தரகர் தாமஸ் ஜோசப் என்பவரும் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. 
இது குறித்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார் கூறியது: மாணவர் இர்பான், மொரீஷியஸ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அவரைத் தேடி வருகிறோம். அவரது தந்தை முகமது சபியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இடைத்தரகர்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தெளிவான தகவல்களை அளிக்கவில்லை. அவர்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில், இடைத்தரகர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையருக்கு சம்மன்: இதனிடையே, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின்போது, இர்பான் சமர்ப்பித்திருந்த சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன், இந்த வழக்கு விசாரணைக்கு தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு, மருத்துவக் கல்லூரி முதன்மையர் ஸ்ரீனிவாசராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவர் வெங்கடேசன் சார்பில் ஜாமீன் மனு: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை மாணவர் உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவரது சார்பில் தேனி மாவட்டக் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது அக்டோபர் 3-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT