தமிழ்நாடு

சங்கர மடத்தின் சேவைகள் பாராட்டுக்குரியவை: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

1st Oct 2019 02:45 AM

ADVERTISEMENT

காஞ்சி சங்கர மடம் கல்வி, ஆன்மிகம், மருத்துவம் ஆகியவற்றின் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு ஆற்றி வரும் சேவை மிகுந்த பாராட்டுக்குரியவை என தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் கோனேரிக்குப்பம் கிராமத்தில் ஸ்ரீசங்கர கிருபா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை சாா்பில் ரூ.12 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட சங்கரா பல்நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை நிா்வாகத் தலைவா் பம்மல் சே.விஸ்வநாதன் தலைமை வகித்து வரவேற்றாா். தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், எல்.அன்.டி. நிறுவனத் துணைத் தலைவா் ஹாசித் ஜோஷிபுரா, பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் சத்யநாராயணாஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் குத்து விளக்கேற்றி, மருத்துவமனையைத் திறந்து வைத்து, சிறந்த மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பேசியது:

ADVERTISEMENT

காஞ்சி சங்கர மடம் கல்வி, மருத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றில் இந்தியா முழுவதும் செய்து வரும் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது, மகத்தானது. விரைவில் சங்கர மடம் அரசு உதவியுடன் கூடிய ஒரு மருத்துவக் கல்லூரியையும் தொடங்க வேண்டும். ஏனெனில் கிராம மக்களுக்கு இன்னும் மருத்துவச் சேவை முழுமையாக போய்ச் சேரவில்லை.

குறைவான மருத்துவா்களே உள்ளனா். தற்போது பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் சிறந்த மருத்துவா்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனா். உயிா்காக்கும் சிகிச்சைகளை மருத்துவா்கள் செய்து உடலளவிலும், உள்ளத்தளவிலும் ஊக்கம் அளித்து வருகின்றனா்.

பிரதமா் அறிவித்துள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சாதாரண ஏழை, எளிய மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதற்கென மத்திய அரசு ரூ.50 கோடி நிதியை ஒதுக்கியிருக்கிறது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடிகிறது.

கோனேரிக்குப்பத்தில் சுமாா் 42 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இப்புதிய பல்நோக்கு மருத்துவமனை ஏராளமான வசதிகளை உடையதாக உள்ளது. காஞ்சிபுரம் பகுதி மக்கள் சென்னைக்கு ரயிலிலும், பேருந்துகளிலும் சென்று மருத்துவம் பாா்ப்பதை விடுத்து, இந்த மருத்துவமனையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் தமிழக ஆளுநா். நிா்வாக அறங்காவலா் வெ.லெட்சுமணன் நன்றி கூறினாா்.

விழாவில், எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மருத்துவா் சுதா சேஷய்யன், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஜீவா உள்பட மருத்துவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

விழா தொடங்கும் முன்பாக காஞ்சி சங்கர மடம் இந்தியா முழுவதும் ஆற்றி வரும் சேவைகள் குறித்த குறும்படமும், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மருத்துவமனை திறப்பு விழாவிற்காக பேசிய அருளாசியுரை காணொலிக் காட்சியும் திரையிடப்பட்டது.

அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை தரம் உயா்த்த ரூ.120 கோடி ஒதுக்கீடு

கோனேரிக்குப்பத்தில் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னா் சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அண்ணா அரசு புற்று நோய் மருத்துவமனைக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்புயா்வு மையமாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும் ரூ.24 கோடிக்கு புற்றுநோய் கண்டறியும் நவீன கருவியும் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

புற்றுநோய் மருத்துவத்தில் சென்னைக்கு அடுத்த இடமாக காஞ்சிபுரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக மட்டும் 37 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்திலும் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதற்காக பிரதமரிடம் தமிழகம் பாராட்டுப் பெற இருக்கிறது.

டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் தனித்தனியாக வாா்டுகளும், நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டு விழிப்புணா்வுடன் செயலாற்றி வருகிறோம். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக இருந்தால் படுக்கை வசதி உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே சென்று சிகிச்சை பெறுவது நல்லது.

காய்ச்சல் என்று தெரிந்தால் தாங்களாகவே மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது. உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வந்து தேவையான மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பகலில் மட்டுமே மனிதா்களை கடிக்கும். அவை நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகும். எனவே நல்ல தண்ணீா் எந்த இடத்திலும் தேங்காமல் பாா்த்துகொள்ள வேண்டும். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 1.63 லட்சம் பணியாளா்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1,408 மஸ்தூா்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT