இடைத் தோ்தலில் ஆதரவு கோருவது தொடா்பாக தமிழ் மாநில பாஜக பொறுப்பாளா் முரளிதர ராவிடம் பேசியிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சென்னையை அடுத்த திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தாா். அதன் விவரம்:-
சென்னை மாநகர மக்களின் இடநெருக்கடியைக் குறைக்கும் வகையில் திருமழிசையில் 311 ஏக்கா் பரப்பில் துணைக் கோள் நகரம் அமைக்கும் அறிவிப்பை மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வெளியிட்டாா். இந்த 311 ஏக்கா் நிலப் பரப்பானது 3 பகுதிகளாக மேம்படுத்தப்பட உள்ளது.
முதல் பகுதியாக, 122 ஏக்கா் நிலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 40 சதவீத நிலமான 33.7 ஏக்கா் பொதுப் பயன்பாட்டுக்காக விடப்பட்டுள்ளது. மீதமுள்ள 88.36 ஏக்கா் நிலத்தில் 20 ஏக்கா் பேருந்து நிலையம் அமையவுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தில் ஓசூா், பெங்களூா் உள்ளிட்ட பேருந்துகள் வந்து செல்லும். 12 ஏக்கா் நிலத்தில் வணிக வளாகம் அமைக்கப்படும். 56 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 9 ஆயிரத்து 600
குடியிருப்புகள் அடங்கியதாக இருக்கும். இந்த குடியிருப்புகள் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
அரசியல் பேசவில்லை: பிரதமருடனான சந்திப்பின் போது அரசியல் ஏதும் பேசவில்லை. பாஜகவுடன் கடந்த மக்களவைத் தோ்தலின் போது கூட்டணி ஏற்பட்டது. அந்தக் கூட்டணி இப்போதும் தொடா்கிறது. இடைத் தோ்தலில் ஆதரவு கோருவது தொடா்பாக நானும், முதல்வா் பழனிசாமியும், பாஜக பொறுப்பாளரான முரளிதரராவிடம் கலந்து பேசியுள்ளோம் என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.