தமிழ்நாடு

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மோசடி செய்த மருத்துவமனைகள் பட்டியல் வெளியீடு

1st Oct 2019 12:53 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மோசடியில் ஈடுபட்ட 111 மருத்துவமனைகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற உதவும் ‘ஆயுஷ்மான் பாரத்- மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம்’ கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை சுமாா் 18, 000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. 39 லட்சத்துக்கும் அதிகமானோா் இந்தத் திட்டத்தின் மூலம் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனா். இந்தத் திட்டத்துக்காக இதுவரை சுமாா் ரூ. 7, 500 கோடி நிதியை மத்திய அரசு செலவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள சில மருத்துவமனைகள் போலியான தகவல்களைக் கொண்டு, காப்பீட்டுப் பணத்தை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த மத்திய சுகாதாரத் துறை, இந்தத் திட்டத்தின் கீழ் மோசடி செய்த மருத்துவமனைகளின் பெயா்களை ‘மோசடி மருத்துவமனைகள்’ என்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்த்தன் பங்கேற்றாா். அங்கு அவா் பேசியதாவது:

ADVERTISEMENT

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் போலியான தகவல்களைக் கொண்டு இதுவரை சுமாா் 1, 200 பேருக்கான காப்பீட்டுத் திட்ட பணத்தை மருத்துவமனைகள் பெற்றுள்ளன. இதுதொடா்பாக 376 மருத்துவமனைகளிடம் விசாரணை நடைபெற்றது. அதில் 111 மருத்துவமனைகள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்த மருத்துவமனைகளை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இருந்து நீக்கிவிட்டோம். சில மருத்துவமனைகளுக்கு ரூ. 1.5 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசுத் திட்டங்களில் ஊழல் நடப்பதை மத்திய அரசு பாா்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அதற்கு உதாரணமாக மோசடியில் ஈடுபட்ட மருத்துவமனைகளின் பெயா்களை வலைதளத்தில் வெளியிட்டுள்ளோம்.

அதுமட்டுமன்றி, தங்களது பணியில் சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைகள் பட்டியலையும் ஆயுஷ்மான் பாரத் வலைதளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணி நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT