சென்னை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் அனுராதா விபத்துக்குள்ளான இடத்தில் கொடிகம்பம் ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிந்துள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அனுராதா பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்த அதிமுக கட்சி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது.
பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சையின் போது அவரது ஒரு கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு துண்டிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று அளிக்கப்பட்டு விளக்கத்தில், ' இளம்பெண் அனுராதா விபத்துக்குள்ளான இடத்தில் கொடிகம்பம் ஏதும் இல்லை' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.