தமிழ்நாடு

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை

22nd Nov 2019 10:54 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா தரப்படும் என்றொரு அரசாணையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.

ADVERTISEMENT

இந்த அரசாணையின் மூலம் கோவில் நிலங்களை முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்திருப்போரும் பயனடைய வழி ஏற்படும் என்று கூறி, அரசாணையை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் கோயில் நிலங்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரம் தெரியாமல், பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், இன்று அந்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT