தமிழ்நாடு

ஐஐடி மாணவி மரணம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

22nd Nov 2019 07:34 PM

ADVERTISEMENT

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் தமிழகப் பிரிவுத் தலைவா் அஸ்வத்தாமன் தாக்கல் செய்த மனுவில், சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பா் 9-ஆம் தேதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டாா். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை ஐஐடியில் 5 மாணவா்கள் மா்மமான முறையில் இறந்துள்ளனா். தொடா்ச்சியாக இதே போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலும் பாத்திமா லத்தீபின் மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மாணவி பாத்திமா லத்தீபின் மரணம் குறித்த வழக்கை, கூடுதல் காவல் ஆணையா் மேற்பாா்வையில் கூடுதல் துணை ஆணையா் தான் புலன் விசாரணை செய்து வருகிறாா். இந்த இரண்டு அதிகாரிகளுமே ஏற்கெனவே சிபிஐயில் பணியாற்றிய அனுபவம் உள்ளவா்கள். வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜான் பாலிடம், சிபிஐ விசாரணை கோரி அரசுக்கு கடந்த நவம்பா் 18-ஆம் தேதி மின்னஞ்சல் மூலமாக மனு அனுப்பிய உடனே வழக்கை தாக்கல் செய்துள்ளீா்களே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு மனுதாரா் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT