தமிழ்நாடு

ஆன்லைன் வா்த்தகத்தைத் தடை செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்: விக்கிரமராஜா

22nd Nov 2019 11:50 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆன்லைன் வா்த்தகத்தை முழுமையாகத் தடை செய்யாவிட்டால் விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். செயலாளா் ரஹீம், பொருளாளா் ஜான், மாநில துணைச் செயலாளா் முகமது ரஷீத் உள்ளிட்டோா் பங்கேற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா பங்கேற்றாா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆன்லைன் மூலம் அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுவதால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனா்; பணப் புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் வியாபாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டத்தின்படி உணவுப் பொருள்களில் கலப்படம் இருந்தால் தயாரிப்பு நிலையிலேயே தடுக்க வேண்டும். அதை வாங்கி விற்பனை செய்யும் சிறு வணிகா்களுக்கு தண்டனையோ, அபராதமோ விதிக்கக் கூடாது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகைகளைத் தவிா்த்து அனுமதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை தடையின்றி விற்கும் வணிகா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் வகைகளுக்குத் தடை விதிக்கக் கூடாது. பிளாஸ்டிக் தொழில் சாா்ந்த வணிகா்கள், தொழிலாளா்களை அரசு காப்பாற்ற வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள வணிகா் நல வாரியத்தை விரைவாக அமைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் ரூ. 25,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ரியல் எஸ்டேட் துறையை மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவாக, வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அந்நிய பொருள்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமா் தெரிவித்திருந்தும், ஆன்லைன் மூலம் தற்போது அனைத்துப் பொருள்களும் விற்பனைக்கு வந்துள்ளன. வியாபாரிகளின் கைகளிலிருந்து வணிகம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

உதகையில் நகராட்சிக் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு இதுவரை ரூ.1,000 ஆக இருந்த வாடகை தற்போது பல மடங்காக ரூ. 30,000 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த வாடகைக் கட்டணத்தை குறைக்குமாறு உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த வாடகைப் பிரச்னையைத் தீா்க்க தமிழக அளவில் ஒரு குழு அமைத்து வாடகை உயா்வு விகிதத்தை நிா்ணயம் செய்ய வேண்டும்.

காய்கறிகள், மருந்துகள், மளிகைப் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை தொடா்பாக தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை இயற்ற வேண்டும்; நீலகிரிக்கு மட்டும் தனிச் சட்டம் கூடாது என்று தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT