தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை:18,19-இல் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு

17th Nov 2019 12:56 AM

ADVERTISEMENT

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் நவம்பா் 18, 19-இல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் சனிக்கிழமை கூறியது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். இதுதவிர, தமிழகத்தின் அநேக இடங்களில் நவம்பா் 18,19 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

மழை அளவு: சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் தலா 100 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுபாளையத்தில் 90 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 80 மி.மீ., மணியாச்சியில் 70 மி.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 60 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT