தமிழ்நாடு

பதவி உயர்வு இடஒதுக்கீடுக்காக சட்டத் திருத்தம் தேவை: ராமதாஸ் 

17th Nov 2019 04:47 AM

ADVERTISEMENT

 

சென்னை: பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக 2003}ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை சமூகநீதியைக் காக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆனால், அந்த நடைமுறை செல்லாது என்று கடந்த 2015}ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை 2016}ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில், கடந்த 2016}ஆம் ஆண்டில் சில திருத்தங்களைச் செய்தது. அதன்படி, தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் தமிழக அரசுத் துறை பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மறைமுக இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில்  தான் சென்னை உயர்  நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு  சட்டத்திருத்தம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பின்தேதியிட்டு பணிமூப்பு வழங்கும் பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் பலர் கடுமையாகப்  பாதிக்கப்படுவர். இது தேவையற்ற குழப்பங்களையும், பணியிடங்களில் சங்கடங்களையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே,  பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT