தமிழ்நாடு

நாட்டின் நலனுக்காக திமுக  எம்.பி.க்கள் குரல் எழுப்பி வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

17th Nov 2019 05:17 AM

ADVERTISEMENT

 

தருமபுரி:  தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் நலனுக்காகவும் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்பி வருகின்றனர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தருமபுரி வள்ளலார் திடலில் சனிக்கிழமை  மாலை திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் மு.க.ஸ்டாலின் பேசியது:
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம்,  புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் 39-இல் திமுக  தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்றது.  தேர்தலில் வெற்றி பெற்ற நமது மக்களவை உறுப்பினர்கள், தமிழகத்தைக் கடந்து, சமூக பிரச்னைகளுக்காவும், மதச்சார்பின்மையைக் காக்கவும்,  ஜனநாயகத்தைக் காப்பது மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட  பல்வேறு பிரச்னைகளில்,  இந்தியாவின் நலனுக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.  மக்களவையில் மூன்றாவது கட்சியாக திமுக விளங்கி வருகிறது. 
தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு,  புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கி, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால்,  இதுவரை எந்த தொழில் நிறுவனமும் தொழில் தொடங்க முன்வரவில்லை. மாறாக, தமிழகத்தில் இருக்கின்ற தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு, வேறு மாநிலத்துக்குச் செல்கின்றன.  புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்காமல்,  இருந்த வேலைவாய்ப்பையும் இழக்கின்ற சூழல் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது.
முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க வேண்டுமெனில்,  அவர்களுக்கு தமிழக அரசு மீது, நம்பிக்கை ஏற்பட வேண்டும்.  ஆனால்,  முதலீட்டாளர்களுக்கு இந்த அரசு மீது நம்பிக்கை ஏற்படவில்லை.  தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை.  மக்களிடம் பணப் புழக்கம் இல்லை.  வேலைவாய்ப்புகளும் இல்லை.  விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.  இதில் அரசு கவனம் செலுத்துவதில்லை.  தமிழகம் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.  வீழ்ந்து கிடக்கிற தமிழகத்தை மீட்டெடுக்க திமுக போராடும்.
மொழி, இனத்துக்காக சிறை சென்றவன்:  நான் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவன் அல்ல.  மொழி, இனம் காக்கவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் போராடி பல முறை சிறை சென்றிருக்கிறேன்.  மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு,  ஓராண்டு சிறை கொடுமைகளை அனுபவித்துள்ளேன்.  ஆனால்,  தற்போது, தியாகம், போராட்டம், சிறை, சித்ரவதை குறித்து அறியாதவர்கள் இது குறித்து விமர்சனம் செய்கின்றனர்.  சிறைக் கொடுமைகளைக் காட்டிலும்,  இத்தகைய விமர்சனங்கள் மிகுந்த வேதனையளிக்கிறது என்றார் மு.க.ஸ்டாலின்.
 திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில்,  மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி,  தருமபுரி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார்,  பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன்,  மாவட்ட துணைச் செயலர் சுப்ரமணி,  மக்களவை முன்னாள் உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT