தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

17th Nov 2019 04:58 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை: உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி பேசியது:

உள்ளாட்சித் தேர்தல் என்பது அதிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்பதால் ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேவையான வாக்குப் பெட்டிகள், வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். கூடுதலாக மின்னணு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி என ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்குரிய பணிகள் தொடர்பான பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளில் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பயன்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிகள், பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க வெப் கேமரா வசதி ஆகியவற்றை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தவுள்ள படிவங்கள், வாக்குச்சீட்டுகள், மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர் எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் ஜெ.ஜெயகாந்தன் (சிவகங்கை), கொ.வீரராகவ ராவ் (ராமநாதபுரம்), பி.உமா மகேஸ்வரி (புதுக்கோட்டை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT