தமிழ்நாடு

மாணவர்களை நாடி அருங்காட்சியகம்: விழிப்புணர்வு வாகனப் பயணம் தொடக்கம்

12th Nov 2019 03:05 AM

ADVERTISEMENT

கிராமப்புற மாணவர்களுக்கு அருங்காட்சியகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடமாடும் அருங்காட்சியக விழிப்புணர்வு வாகனப் பயணம் வேலூரில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அருங்காட்சியகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
 பள்ளி, கல்லூரிகளில் பயிலும் தற்கால மாணவர்களிடையே வரலாறு, புவியியல், சமூகவியல், உயிரியல், தொன்மையான சின்னங்கள் ஆகியவை குறித்த புரிதல் இல்லாத நிலைமை நீடிக்கிறது. இவை தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அருங்காட்சியகங்களில் மாணவர்களுக்கு கட்டணச் சலுகையும் அளிக்கப்படுகிறது. எனினும், அருங்காட்சியகங்களுக்கு வந்து செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
 இதையடுத்து, மாணவர்களுக்கு அருங்காட்சியகங்களின் முக்கியத்துவம் குறித்தும், நாட்டின் வரலாறு, புவியியல், சமூகவியல், உயிரியல், தொன்மை சின்னங்கள், புகைப்படங்கள், நாணயங்கள் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கும் வகையில் நாடமாடும் அருங்காட்சியகத்தை மாநில தொல்லியல், அருங்காட்சியகத் துறை ஏற்பாடு செய்துள்ளது. முக்கிய வரலாறுகள், தொன்மை சின்னங்கள், புகைப்படங்கள், நாணயங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ள நடமாடும் அருங்காட்சியக வாகனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயணம் செய்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
 அதேபோல், இந்த ஆண்டு "மாணவர்களைத் தேடி அருங்காட்சியகம்' என்ற தலைப்பில் தனது பயணத்தை மேற்கொண்டுள்ள இந்த வாகனம் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வேலூருக்கு வந்தது. வேலூர் கோட்டை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த இந்த வாகனத்தை மாணவர்கள் பார்வையிட்டு அதில் இடம்பெற்றிருந்த அருங்காட்சியக அம்சங்களை அறிந்து கொண்டனர்.
 மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்த இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் மாணவர்களைத் தேடி திங்கள்கிழமை தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த வாகனம் அடுத்த ஒரு மாத காலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அருங்காட்சியகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT