தமிழ்நாடு

மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நவ.16-இல் பொதுக்கூட்டம்: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

12th Nov 2019 02:49 AM

ADVERTISEMENT

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 16-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்று திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
 திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
 தீர்மானம்: தமிழக வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லுமளவுக்கு ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசுக்கும், அந்த அரசுக்கு அனைத்து வகையிலும் பலத்த பாதுகாப்பு அளித்துவரும் மத்திய பாஜக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் திமுகவின் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கிட, தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும், மிகச் சிறப்பான பயனளித்திடும் வகையில், நவம்பர் 16-ஆம் தேதி திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும்.
 மேலும், அதிமுக அரசின் முறைகேடுகளை மக்கள் மனங்களில் ஆழப்பதிந்திடும் வண்ணம் துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்தோறும் விநியோகம் செய்ய வேண்டும், திண்ணைப் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை: மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தல் போல் அலட்சியமாகத் தேர்தல் பணியாற்றக் கூடாது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால், அதில் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியுற்றால், அது சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். அதனால், மாவட்டச் செயலாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்துள்ளார்.
 மேலும், சரியாகச் செயல்படாத சில மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறிக்கும் எண்ணத்திலும் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். கூட்டத்தில் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்பட 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
 உள்ளாட்சி தேர்தல்: நவ.14 முதல் விருப்பமனு
 உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நவம்பர் 14-ஆம் தேதி முதல் விருப்ப மனு செலுத்தலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:
 உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆளுங்கட்சியான அதிமுக தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்குரிய விண்ணப்பப் படிவங்களை வழங்குவது குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எது எப்படியிருப்பினும், உள்ளாட்சித் தேர்தலை மிக மிக ஆவலோடு எதிர்பார்த்து திமுகவும் காத்திருக்கிறது. அதைச் சந்திப்பதற்கு எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இது குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதித்து உள்ளோம்.
 திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் நவம்பர் 14 முதல் 20-ஆம் தேதி வரையில் அந்தந்த மாவட்டத்தில் விருப்ப மனுக்களைக் கொடுக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவோம். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்துதான் தேர்தலைச் சந்திப்போம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றார் மு.க.ஸ்டாலின்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT