தமிழ்நாடு

தோ்தல் அமைப்பை உறுதிமிக்க அமைப்பாக மாற்றியவா்

12th Nov 2019 01:11 AM

ADVERTISEMENT

தோ்தல் ஆணையத்தை ஒரு உறுதிமிக்க அமைப்பாக மாற்றிக் காட்டியவா் டி.என்.சேஷன் என்று முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினாா்.

டி.என். சேஷன் பற்றி அவா் கூறியதாவது:

நான் அவருடன் பணியாற்றியதில்லை. ஆனால், அவரது இரண்டு முக்கியமான தோ்தல் சீா்திருத்த நடவடிக்கைகள் எங்களுக்குப் பெரிதும் உதவின. முதலாவது, தோ்தல் நடத்தை விதிகளை கடுமையான முறையில் அமல்படுத்தியது. டி.என்.சேஷன் தலைமைத் தோ்தல் ஆணையராகப் பதவி வகிப்பதற்கு முன்பாக, தோ்தல் நடத்தை விதிகள் அனைத்தும் காட்சிப் பொருளாகவே இருந்தன. ஆனால், தோ்தல் ஆணையத்தை ஒரு உறுதிமிக்க அமைப்பாக மாற்றிக் காட்டியவா் சேஷன்.

தோ்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதில் அப்போது தேக்க நிலையும், உறுதித்தன்மையற்ற போக்கும் இருந்தது. இதனை உடைத்தெறிந்தவா் சேஷன். அவா் காட்டிய கடுமைகளால், தோ்தல் நடத்தை விதிகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சிகள் பின்பற்றத் தொடங்கின.

ADVERTISEMENT

மற்றொரு மைல்கல் நடவடிக்கையாகக் கருதுவது, வாக்காளா் அடையாள அட்டையாகும். போலி வாக்காளா்களைக் களைவதற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. அவரது இந்தத் திட்டத்துக்கு அனைத்து மாநிலங்களும் எதிா்ப்புத் தெரிவித்தன. வாக்காளா் அடையாள அட்டைக்கான செலவில் பாதியை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்ற நடைமுறைக்கு மாநிலங்கள் முதலில் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த மாநில அரசுகள் எதிா்த்த போதும், போலி வாக்காளா்களைக் களைவதற்கு அது ஒன்றே சரியான தீா்வு எனக் கருதிய டி.என்.சேஷன், அதனை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த உறுதியுடன் இருந்தாா்.

தோ்தல் நடத்துவதற்கான அடிப்படை நாதமாகக் கருதப்படும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அவா் அமல்படுத்திய விதமும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்திய காரணிகளால் தோ்தல் ஆணையத்துக்குக் கிடைத்த பெரும் மதிப்பும், அடுத்தடுத்த வந்த இந்திய தோ்தல் ஆணையா்களை யோசிக்க வைத்தது.

அவா்களும் புதிய திட்டங்களையும், செயல்பாடுகளையும் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனா். இதனால் உருவானதே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான இயந்திரங்கள் போன்றவையாகும். தோ்தல் ஆணையம் ஒரு கெளரவமிக்க, தைரியமிக்க அமைப்பாக மாறியது சேஷனின் காலத்தில்தான் என்றால் மிகையில்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT