மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் திங்கள்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவைப் பொருத்தவரை தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு எந்த வெற்றிடமும் இல்லை.
இது நடந்து முடிந்த சட்டப் பேரவை இடைத்தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெற்றிடம் நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் கூறியுள்ளார். அரசியல் தலைவர்கள் யாரும் சொல்லவில்லை.
எனவே, சம்பந்தமில்லாதவர்கள் கூறுவதைப் பற்றி நாம் பேசத் தேவையில்லை. அவரது பேச்சு, ஊடகங்களில் செய்திக்காகவே பெரிதுபடுத்தப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்தத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தல் கூட்டணியே தொடரும்.
சென்னையில் காற்று மாசு ஏதும் இல்லை என்பதை வருவாய்த் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். மாமல்லபுரம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, மத்திய அரசுடன் இணைந்து மாமல்லபுரத்தை பெரிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அமமுக நிர்வாகி புகழேந்தி அதிமுகவில் இணைவதற்கு கடிதம் கொடுத்தால் அது தொடர்பாக கட்சித் தலைமை பரிசீலித்து முடிவு செய்யும் என்றார்.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, முன்னாள் அமைச்சர் தாமோதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.