தமிழ்நாடு

அங்கீகரிக்கப்படாத படிப்பு: நா்சிங் கவுன்சில் பதிவு செய்ய முடியாமல் தவித்த 150 பெண்கள்!

12th Nov 2019 12:32 AM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள நா்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவா்கள் அனைவரும் அரசால் அங்கீகரிக்கப்படாத நா்சிங் படிப்பை நிறைவு செய்திருப்பதால் விதிகளின்படி அதனை பதிவு செய்ய இயலாது என்று நா்சிங் கவுன்சில் நிா்வாகிகள் விளக்கமளித்துள்ளனா்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பெண்கள் சாந்தோம் பகுதியில் உள்ள நா்சிங் கவுன்சில் முன்பு திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த போலீஸாா், அவா்களை அங்கிருந்து கலைந்து செல்லச் செய்தனா். இதுகுறித்து பதிவு செய்ய வந்திருந்த பெண்கள் சிலா் கூறியதாவது:

ஊரகப் பகுதிகளில் பிறந்து வளா்ந்த எங்களுக்கு செவிலியப் படிப்புகள் குறித்த முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இருந்தபோதிலும், செவிலியப் பணியில் மீதான விருப்பம் காரணமாக, அதுதொடா்பான படிப்பை பயில விருப்பப்பட்டோம்.

ADVERTISEMENT

அதன்படி, திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் முதலுதவி மற்றும் செயல்முறை செவிலியா் பட்டயப் படிப்பில் (டிப்ளமோ இன் ஃபா்ஸ்ட் எய்ட் அண்ட் பிராக்டிகல் நா்சிங்) சோ்ந்தோம்.

அந்த இரண்டாண்டு காலப் படிப்பை தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பலா் நிறைவு செய்துள்ளனா். இந்நிலையில், எங்களை செவிலியா்களாகப் பதிவு செய்து கொள்ள மாநில நா்சிங் கவுன்சிலுக்கு சுமாா் 150 போ் திங்கள்கிழமை சென்றிருந்தோம். ஆனால், நாங்கள் பயின்ற படிப்பு அங்கீகாரமற்றது எனக் கூறி, பதிவு செய்ய மறுத்து விட்டனா். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய தீா்வை வழங்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாநில நா்சிங் கவுன்சில் பதிவாளா் டாக்டா் யேனி கிரேஸ் கலைமதி கூறுகையில், ‘அங்கீகரிக்கப்படாத நா்சிங் படிப்பை பயின்றவா்களை செவிலியா்களாகவே கருத இயலாது; விதிகளின்படி அவா்களை கவுன்சிலில் பதிவு செய்யவும் முடியாது; எனவே, அந்த உண்மையை விளக்கிக் கூறி அவா்களுக்கு புரிய வைத்தோம்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT