தமிழ்நாடு

தலித் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செந்துறை அருகே உயர் சாதி ஹிந்துக்கள் கோயிலுக்கு பூட்டு

11th Nov 2019 12:31 PM

ADVERTISEMENT

 

அருண் ஸ்டாலின், திவ்யா தம்பதியின் திருமணம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற அவலநிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்துறை அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் இந்த ஜோடியின் திருணம் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த உயர் சாதி ஹிந்துக்கள் அக்கோயிலுக்கு பூட்டு போட்டனர். பின்னர் போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உயர் சாதி ஹிந்துக்களுடன் பேச்சுவாரத்தை நடத்தி சாவியைப் பெற முயற்சித்தனர். ஆனால் இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கோயில் பூட்டு உடைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருண் ஸ்டாலின், திவ்யா தம்பதியின் திருமணம் திட்டமிடப்பட்ட நேரத்தை விட சுமார் 2 மணிநேர தாமதத்துக்குப் பின்னர் நடைபெற்றது.

முன்னதாக, அரியலூரில் உள்ள பெருமாள் கோயிலில் திருமணம் செய்ய இந்த ஜோடி திட்டமிட்டிருந்தது. ஆனால், அங்கு அதிகளவிலான திருமணங்கள் நடத்த ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டதால் அக்கோயிலைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதன்பின்னர் தான் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படியும், மேலும் மணமகனின் சொந்த ஊரான நம்மங்குணம் கிராமத்தின் அருகில் அமைந்துள்ளதால், சொக்கநாதபுரம் கோயிலில் திருமணம் செய்ய இந்த ஜோடி நவம்பர் 7-ஆம் தேதி உரிய கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தது. 

ADVERTISEMENT

தலித் ஜோடியின் திருமணச் செய்தி தொடர்பாக சனிக்கிழமை இரவில் அப்பகுதியைச் சேர்ந்த உயர் சாதி ஹிந்துக்கள் அறிந்துகொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இரவோடு இரவாக அவர்கள் அக்கோயிலுக்கு பூட்டு போட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த ஜோடியின் உறவினர் சசிகுமார் அறிந்துகொண்டு, போலீஸார் மற்றும் உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சசிகுமார் கூறுகையில்,

நம்மங்குணம் கிராமத்தில் கோயிலோ, திருமண மண்டபங்களோ கிடையாது. எனவே தான் நாங்கள் இப்பகுதியிலுள்ள கோயிலில் திருமணம் செய்ய முடிவு செய்தோம். இதற்காக உரிய முறையில் அனுமதியும் பெற்றோம். ஆனால் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் அந்த கோயிலுக்கு பூட்டு போட்டுள்ளனர் என்று தெரிவித்தார். 

அப்பகுதியின் வருவாய்த்துறை அதிகாரி ஜெ.பாலாஜி மற்றும் செந்துறை தாசில்தார் தேன்மொழி ஆகியோர் அந்த கிராமத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் 3 பூட்டுகளுக்கான சாவியைப் பெற்றுள்ளனர். இருப்பினும் மற்ற 2 பூட்டுகளும் உடைத்து திறக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் முகூர்த்தம் குறிக்கப்பட்ட நிலையில், சுமார் 100 போலீஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மதியம்1:30 மணியளவில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக தாசில்தார் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் அக்கிராமத்தைச் சேர்ந்த உயர் சாதி ஹிந்துக்கள் தரப்பில் கூறப்பட்டதாவது,

கடந்த 30 வருடங்களாக இக்கோயிலின் அனைத்து பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் உள்ளிட்டவற்றை எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஏற்று நடத்தி வருகிறோம். இங்கு திருமணம் செய்ய வெளியாட்களை அனுமதிப்பதில்லை. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் வந்தவுடன் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் திருமணம் நடைபெறுகிறது. இதை நாங்கள் விரும்பவில்லை, எனவே கோயிலை பூட்டினோம் என்று தெரிவித்தனர்.

தற்போது இப்பிரச்னை தீர்க்கப்பட்டு, திருணம் நடைபெற்றது. அனைத்து விசாரணையும் நடைபெற்ற பின்னர் இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் எஸ்.பி. ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

Tags : Dalit wedding
ADVERTISEMENT
ADVERTISEMENT