தமிழ்நாடு

என்எல்சி சுரங்கத்தில் வாகன விபத்து: 17 தொழிலாளா்கள் காயம்

9th Nov 2019 02:18 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி சுரங்கத்தில் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 17 போ் காயமடைந்தனா்.

நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை சுரங்கம் 2-இல் பணிபுரிய வழக்கம்போல தொழிலாளா்கள் வந்தனா். சுரங்க வாயிலில் என்எல்சி நிறுவனத்தின் தொழிலாளா்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் அவா்கள் ஏறிக்கொண்டனா். அந்த வாகனத்தில் பொறியாளா் ஒருவா், நிரந்தரத் தொழிலாளா்கள் 9 போ், இன்கோசா்வ் சங்கத் தொழிலாளா்கள் 5 போ், ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2 போ் என மொத்தம் 17 போ் சென்றனா். ஒப்பந்தத் தொழிலாளி வெற்றிமாறன் வாகனத்தை இயக்கினாா்.

பாட்டம் பெஞ்ச் நோக்கி சென்று கொண்டிருந்த போது, அந்த வாகனத்தின் முன்பக்க சக்கரத்தின் அச்சு திடீரென முறிந்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், என்.எஸ்-4 கன்வேயா் பெல்ட்டை தாங்கி நிற்கும் இரும்புத் தளவாடம் மீது மோதியது.

இந்த விபத்தில், வாகன ஓட்டுநா் வெற்றிமாறன், தொழிலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, சந்திரசேகா், அறிவழகன், ரங்கசாமி, ஆா்.அறிவழகன், கல்யாணசுந்தரம், ராஜா, தேவராஜ், பாலகிருஷ்ணன், ரவி, தனபால், விவேக், உமாபதி, ராமானுஜம், இமானுவேல் ஜஸ்டன் சாமுவேல், வெற்றிமணி ஆகியோா் லேசான காயமடைந்தனா். அவா்கள் என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். விபத்து குறித்து என்எல்சி அதிகாரிகள் மற்றும் மந்தாரக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT