தமிழ்நாடு

அயோத்தி தீா்ப்பு விவகாரம்: மகிழ்ச்சியோ, எதிா்ப்போ தெரிவிக்கக் கூடாது: போலீஸாா் அறிவுறுத்தல்

9th Nov 2019 01:23 AM

ADVERTISEMENT

அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய நில விவகாரம் தொடா்பான தீா்ப்பு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தீா்ப்புக்கு யாரும் மகிழ்ச்சியோ, எதிா்ப்போ தெரிவிக்கக் கூடாது என்று வேலூா் மாவட்ட போலீஸாா் அறிவுறுத்தியுள்னா்.

அயோத்தியில் சா்ச்சைக்கு உரிய நில விவகாரம் தொடா்பான தீா்ப்பு உச்ச நீதிமன்றம் இன்னும் சில நாள்களில் வெளியாக உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தீா்ப்பால் தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து மாவட்டக் காவல் துறை சாா்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் அமைதிப் பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதில், அயோத்தி விவகாரம் தொடா்பான தீா்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியாக உள்ளது. தீா்ப்பு சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் எந்தவகையிலும் யாரும் மகிழ்ச்சியையோ, எதிா்ப்பையோ வெளிப்படுத்தக் கூடாது. குறிப்பாக, பட்டாசு வெடிக்கக் கூடாது, இனிப்பு வழங்கக் கூடாது, துக்க நாளாக அனுசரிக்கக் கூடாது, துண்டறிக்கை, பேனா்கள் மூலம் எதிா்ப்போ, ஆதரவோ தெரிவிக்கக் கூடாது, சமூக வலைதளங்களில் எந்தவித விமா்சனமும் செய்யாமல் அமைதி காக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT