தமிழ்நாடு

ராஜேந்திர சோழன் கட்டிய கோயில்களில் அழிந்துள்ள நாயக்கர் கால ஓவியங்கள்

4th Nov 2019 02:00 AM

ADVERTISEMENT

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் விக்கிரமங்கலம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கட்டிய கோயில்களில் நாயக்கர் கால ஓவியங்கள் அழிந்து வருகின்றன.
 அரியலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் முட்டுவாஞ்சேரி-ஸ்ரீபுரந்தான் சாலையில் அமைந்துள்ளது விக்கிரமங்கலம். விக்கிரமசோழன் என்ற பட்ட பெயர் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன் (1012-1044) காலத்தில் இவ்வூர் வணிக நகரமாக உருவாக்கப்பட்டது.
 இதனால் விக்கிரமசோழபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பிற்காலத்தில் விக்கிரமம் எனவும், அதன் பின்னர் விக்கிரமங்கலம் எனவும் மருவி அந்த பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
 இவ்வூரைப் பற்றி கூறும் கல்வெட்டுகள் கங்கைகொண்டசோழபுரம், கீழப்பழுவூர், வேலூர், திருப்புலிவனம், அச்சிறுப்பாக்கம், பிரம்மதேசம்,அய்யன்பேட்டை ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ளன.
 விக்கிரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ பூரண சந்திர கலாம்பிகை சமேத சோழீசுவரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சனீசுவரர், பைரவர், சந்திரன், சூரியனுக்குத் தனித்தனி சந்நிதி இருந்தாலும், இங்கு ராசி மண்டல சிற்பங்கள் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
 சோழர்கள் ஆட்சி செழிக்க அருளியதால் இங்குள்ள இறைவர் சோழீசுவரர் என அழைக்கப்படுகிறார்.பழைமைவாய்ந்த இக்கோயில் மதில்சுவருக்குப் பின்பகுதியில் விஷ்ணுவுக்கும், வடபுறத்தில் பிரம்மாவுக்கும் கோயில் அமைந்துள்ளது.
 ஒரு முறை தனக்கு ஏற்பட்ட ஏழரைச் சனியின் உக்கிரம் குறைய இக்கோயிலில் சனிபகவானுக்கு என தனி சந்நிதி அமைத்தார் ராஜேந்திர சோழன். கோயிலின் முன்புறம் கங்கா தீர்த்தத்தை அமைத்து அதில் புண்ணிய நீராடி சனீசுவரரை தினசரி அவர் பூஜித்து வந்திருக்கிறார்.
 இங்குள்ள சனீசுவரர் சந்நிதியில் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் அரளி, தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து எள்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். தனது பகைவர்களை வெல்வதற்காக பைரவர் சந்நிதி அமைத்து சோழமன்னர்கள் பூஜித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
 இக்கோயில் மகா மண்டப மேல் விதானத்தில் ராசி மண்டலச் சிற்பங்கள் அமைந்துள்ளன. 12 ராசிக்குரிய சிற்பமும் அந்தந்த கிரக தெய்வங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. நாயக்கர் கால ஓவியங்கள் மத்தியில் சூரியனும், நவகிரகங்களின் மூர்த்தியான முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையோடு எழுந்தருளியுள்ளனர். அந்தந்த ராசிக்காரர்கள் தமது ராசிக்கு கீழே நின்று அம்பாளையும், சோழீசுவரரையும் வழிபட்டால் அவரவர் ராசி தோஷங்கள் நிவர்த்தி அடையும்.
 ராஜேந்திர சோழன் இந்த ராசி மண்டலத்துக்குக் கீழே அமர்ந்து தான் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறான். இத்தகவலை, கங்கை கொண்ட சோழபுரம், திருப்புலிவனம், அச்சிறுப்பாக்கம், பிரம்மதேசம், அய்யன்பேட்டை, ஆலங்குடி ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.
 இத்திருக்கோயிலில் குடமுழுக்கு 2013- ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த நிலையில் கோயிலில் இருக்கும் ஏராளமான ஓவியங்கள் அழிந்து வருகின்றன. மதில்சுவர் மற்றும் உள்பிராகாரம், அம்மன் சந்நிதிகளில் நாயக்கர் கால ஓவியங்கள் அனைத்தும் அழியும் நிலையில் உள்ளன.

 கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயிலிலும் அழியும் ஓவியங்கள்: ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயிலிலும் நாயக்கர் கால ஓவியங்கள் அழிந்து வருகின்றன. கங்கை வெற்றியைக் கொண்டாடும் வகையில் ராஜேந்திரன் இக்கோயிலைக் கட்டினார்.
 நளினத்தோடு அமைக்கப்பட்ட விமானம், கிழக்கு நுழைவு வாயில் பெரிய நந்திபகவான். பிரம்மாண்டமான மூலமூர்த்திகள். இருபுறமும் கருங்கல்லாலான துவார பாலகர்கள், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வானசாஸ்திர முறைப்படி வெகு அழகாக செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள், 60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரு கல்லில் வடிமைக்கப்பட்ட லிங்கம், பெரியநாயகி என்ற பெயருக்கு ஏற்றார் போல் பெரிய உருவத்தில் அம்மன் சிலை என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர் கால கட்டடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
 யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாகவும் இக்கோயில் அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீசுவரர் கோயிலையும், இங்குள்ள நாயக்கர் கால ஓவியங்களையும் கண்டு பிரமிக்கின்றனர்.
 ஆனால் இங்குள்ள ஏராளமான ஓவியங்கள் அழிந்து வருகின்றன. கோயில் மதில்சுவர் மற்றும் உள்பிராகாரம், அம்மன் சந்நிதிகளில் சில நாயக்கர் கால ஓவியங்கள் அனைத்தும் அழியும் நிலையில் உள்ளன. சில ஓவியங்கள் பராமரிக்கப்படாததால் அழிந்துள்ளன.

ADVERTISEMENT

 தொல்லியல் துறையினர் ஓவியங்களை முறையாகப் பராமரிக்காததால் இந்த ஓவியங்கள் அழிந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே மேற்கண்ட கோயில்களிலுள்ள பாதுகாப்புச் சின்னங்கள் மீது தொல்லியல் துறை அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளாகும்.
 - சி. சண்முகவேல்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT