மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே மாற்று அரசியல் என்றார் காந்திய மக்கள் இயக்க நிறுவனர், தலைவர் தமிழருவி மணியன்.
நாகர்கோவிலில் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில், "மாற்று அரசியல் மலரட்டும்' என்ற தலைப்பில் சிந்தனை கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று தமிழருவி மணியன் மேலும் பேசியது: நமது நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தற்போது வரை நாட்டு மக்களின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவு இல்லை. இதற்கு காரணம் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவும், காங்கிரஸும் ஆகும். இந்த இரு கட்சிகளும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதில் உறுதியாக உள்ளன. சட்டம், ஒழுங்கு சரியாக இருப்பதற்கு மக்களின் நல்ல பண்புகளே காரணம். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மூலகாரணம் கல்வியாகும். அதுவும் தாய்மொழி வழிக் கல்வி மிக முக்கியம். வெளிநாடுகளில் தாய்மொழி வழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், நமது மாநிலத்தில் ஆங்கிலம் படித்தால்தான் மதிப்பு என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. தமிழக மக்களின் அடையாளம் நமது தமிழ் மொழி.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை நீக்கிவிட்டு புதிததாக ஒருவரை அமர்த்துவது அல்ல மாற்று அரசியல். மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை உண்டாக்கவும், அவர்களது முன்னேற்றத்தையும் பற்றி சிந்தித்து மாற்றி அமைப்பதுமே ஆகும். அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் உள்ள 2 திராவிட கட்சிகளும் மக்களுக்கான பொதுப் பணியை செய்யத் தவறி வருகின்றன. தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் விரும்பும் ஆட்சியை ரஜினியால் மட்டுமே தரமுடியும் என்பது பொதுமக்களின் கருத்து, என்னுடைய கருத்தும் அதுதான் என்றார் அவர்.