தமிழ்நாடு

பதிவு செய்யப்படாமல் வளர்க்கப்படும் 14 ஆயிரம் கால்நடைகள்: நாளொன்றுக்கு விபத்தில் சிக்கும் 6 கால்நடைகள்

4th Nov 2019 03:08 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

சென்னையில் மாநகராட்சியிடம் பதிவு செய்யப்படாமல் சுமார் 14 ஆயிரம் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை உணவு தேடி சாலைகளில் திரிவதால் நாளொன்றுக்கு 6 முதல் 10 கால்நடைகள் வரை விபத்தில் சிக்கி காயமடைவதும், உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டு சுமார் 15 மண்டலங்கள் உள்ளன. இதில், வில்லிவாக்கம், சௌகார்பேட்டை, மின்ட், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், யானைக்கவுனி, சைதாப்பேட்டை, அம்பத்தூர், பள்ளிக்கரணை, திருவொற்றியூர், மணலி, மாதவரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாடு, எருமைகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இந்தக் கால்நடைகளை சாலையில் திரியவிடுவதால் அவை வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதுடன் , இவற்றால் பொதுமக்களும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
 சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டப்படி, கொட்டகையில்தான் கால்நடைகள் வளர்க்க வேண்டும். கால்நடை வளர்க்க மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், கால்நடை வளர்க்க மாநகராட்சியிடம் இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை என்பதும், தற்போது சுமார் 14 ஆயிரம் கால்நடைகள் பதிவு செய்யப்படாமல் வளர்க்கப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
 நாளொன்றுக்கு 6 கால்நடைகள் பாதிப்பு: இதுகுறித்து புளூகிராஸ் அமைப்பைச் சேர்ந்த டான்வில்லியம்ஸ் கூறுகையில், "சென்னையில் கால்நடை வளர்ப்போர் அவற்றுக்கு உணவு அளிக்காமல் சாலைகளில் திரிய விடுகின்றனர். காலை, மாலை நேரங்களில் சாலைகளில் வைத்து பாலைக் கறந்து விற்பனை செய்து விடுகின்றனர். இவை உணவைத் தேடிச் செல்லும்போது விபத்தில் சிக்குகின்றன. சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 6 முதல் 10 வரையிலான கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடைவதும், உயிரிழப்பதும் தொடர் நிகழ்வாகி வருகிறது.
 விபத்தில் இறக்கும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் ரூ. 10 ஆயிரம் வரை இறைச்சிக்கு விற்பனை செய்யும் அவலநிலையும் உள்ளது. சென்னை மாநகரில் கால்நடைகளை வளர்ப்பது தொடர்பாக உள்ள சட்டங்களை மாநகராட்சி முறையாக அமல்படுத்தினாலே கால்நடைகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்றார்.
 ரூ. 54 லட்சம் அபராதம்: இதுகுறித்து மாநகராட்சி கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், "சாலைகளில் திரியும் கால்நடைகள் முதல் முறையாகப் பிடிபட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையும், மூன்று நாள்களுக்கு கால்நடைகளின் பராமரிப்புத் தொகையாக ரூ. 750 என மொத்தம் ரூ. 10,750 அபராதம் விதிக்கப்படுகிறது. அத்துடன் அவற்றின் காதுகளில் வில்லை மாட்டப்பட்டு, இரண்டாம் முறையாகப் பிடிபடும் கால்நடைகள் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 2018-19-ஆம் ஆண்டில் சாலைகளில் திரிந்த 670 கால்நடைகள் பிடிக்கப்பட்டு ரூ. 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளைப் பதிவு செய்வது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
 இதுகுறித்து மாடு வளர்ப்போர் கூறுகையில், "பல தலைமுறைகளாக கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். உணவுத் தட்டுப்பாடு காரணமாகத் தான் கால்நடைகளை சாலையில் விடுகிறோம். எங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு கொட்டகை அமைப்பதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்' என்றனர்.
 கால்நடைகள் வளர்ப்பு விதிகள்
 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் கால்நடைகளை வளர்க்க கூடாது. கொட்டகைக்குள்தான் அவை வளர்க்கப்பட வேண்டும். ஒரு பசுவை வளர்க்க 36 சதுர அடி இடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி 6 அடிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பவதுடன், கொட்டகை தரையில் இருந்து 1 அடி உயரம் இருக்க வேண்டும். சானத்தை சாக்கடையில் கலக்கவிடமால், தனியாக அப்புறப்படுத்த வேண்டும். இவற்றை அந்தந்த மண்டல சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே கால்நடைகள் வளர்க்க அனுமதி அளிக்கப்படும் என்று விதி உள்ளது.
 ஆக்ஸிடாக்சின் ஊசி
 சென்னையில் வளர்க்கப்படும் பெரும்பாலான கால்நடைகளுக்கு பால் அதிகம் சுரப்பதற்காக ஆக்ஸிடாக்சின் எனப்படும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. இந்த ஆக்ஸிடாக்சின் மருந்து வில்லிவாக்கம், சௌகார்பேட்டை பகுதியில் ரூ. 50 முதல் ரூ.100 வரை முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஊசி போட்டு கறக்கப்படும் பாலைக் குடிப்பதால், ஆண்மை குறைவு, இளம்வயதில் பருவம் அடைதல், புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஊசியால் கால்நடைகள் உடலளவில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பதுடன், விரைவில் உயிரிழப்பதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 நெகிழியால் மரணம்
 சென்னையில் பெரும்பாலான கால்நடைகள் உயிரிழப்புக்கு நெகிழி முக்கியக் காரணமாக உள்ளது. குப்பைத் தொட்டியில் நெகிழிப் பைகளில் கட்டி வீசப்படும் உணவுப் பொருள்களைத்தான் அவை அதிக அளவில் உண்கின்றன. சென்னையில் மாதத்துக்கு 5-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதுடன், அவற்றின் வயிற்றில் இருந்து 100 கிலோக்கும் மேல் நெகிழிப் பொருள்கள் அகற்றப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT