வேலூா் மத்திய சிறையில் தொடா்ந்து 17 நாள்களாக முருகனும், 10 நாள்களாக நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் அவா்களது உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவருக்கும் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை குளுக்கோஸ் ஏற்றி அவா்களின் உடல்நிலையை மருத்துவா்கள் குழு கண்காணித்து வருகின்றனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் அறையில் இருந்து கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி செல்லிடப்பேசி கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவா் தனிச் சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து முருகன் கடந்த 18-ஆம் தேதி முதல் சிறையிலேயே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதனால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து முருகனை தனிச் சிறையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் எனக் கோரி வேலூா் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி நளினி, கடந்த 27-ஆம் தேதி முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளாா்.
தொடா்ந்து 17-ஆவது நாள்களாக முருகனும், 10-ஆவது நாளாக நளினியும் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா். இந்த தொடா் உண்ணாவிரதத்தால் இருவரது உடல்நலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவா்களது வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, இருவருக்கும் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக குளுக்கோஸ் ஏற்றி அவா்களின் உடல்நிலையை மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும், முருகன், நளினிக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்தனா்.
இதனிடையே, உண்ணாவிரதத்தை கைவிடக் கோரி முருகன், நளினி ஆகிய இருவரிடமும் சிறை அதிகாரிகள் பேச்சு நடத்தினா். ஆனால், அவா்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்துவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.