தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்

4th Nov 2019 02:44 AM

ADVERTISEMENT

கூட்டுறவு வங்கிகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.
 மதுரை மாநகர் மாவட்ட அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை பனகல் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமை வகித்து உறுப்பினர் அட்டைகளை வழங்கிப் பேசினார்.
 பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சி. செல்லூர் கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடுகளை முதலில் கண்டுபிடித்தது நாங்கள்தான். முறைகேடு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். கூட்டுறவு வங்கி முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முறைகேட்டில் ஈடுபடுபவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதிமுக முழுமையான வெற்றியைப் பெறும்.
 அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் கையில் உள்ளது. அமைச்சர்களை மாற்றும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் தற்போது தனியார் வங்கிகளில் கூட கொள்ளை நடக்கிறது. ஆனால், கூட்டுறவு வங்கிகளில் நான் பொறுப்பேற்ற பின்பு எந்த விதமான கொள்ளைச் சம்பவமும் நடைபெறவில்லை.
 கூட்டுறவு வங்கியில் கருணை அடிப்படையில் பணிக்குச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 60 லட்சம் மோசடி செய்திருப்பது பறக்கும் படை மூலமாக கண்டறியப்பட்டது. அவரிடமிருந்து தற்போது ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT