குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக மழை சற்று தணிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 3 நாள்களாக மழை தணிந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, தொழில்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மழை தணிந்துள்ள நிலையில், சிற்றாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் முறையே 16.10 மற்றும் 16.20 அடியாக உள்ளது. அதேவேளையில், பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 676 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 72 அடியாக உள்ளது.
பேச்சிப்பாறை அணையில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த அணையில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் தேக்க முடியாத நிலை இருந்து வந்தது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அணையின் நீர்மட்டம் 40 அடியை எட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நீர்மட்டம் 39.50 அடியாக இருந்தது.
திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீக்கம்: தொடர் மழை மற்றும் சிற்றாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.