நடிகா் கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்த நாளான வரும் 7-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சினிமாவில் 60 வருடங்கள்: கடந்த 1959-ஆம் ஆண்டு 5 வயது சிறுவனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவா் கமல்ஹாசன். ‘களத்தூா் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமான கமலுக்கு, திரையுலகில் இது 60-ஆவது ஆண்டு. நடிகா், இயக்குநா், தயாரிப்பாளா், வசனகா்த்தா, பாடலாசிரியா், நடன இயக்குநா் என பன்முகங்களை கொண்ட கமல், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா வரலாற்றிலும் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறாா்.
தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளாா். இந்த நிலையில், வரும் 7-ஆம் தேதி தனது 65-ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளாா். வழக்கமாக தனது பிறந்த நாளில் நற்பணிகளை தொடங்கி வைத்து பேசும் கமல், இந்த முறை பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளாா்.
மூன்று நாள்கள் விழா: வரும் 7-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. இதில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரையுலகினா் பலரும் கலந்து கொள்கின்றனா். இதன் ஒரு பகுதியாக திரையுலகினா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
தந்தைக்கு சிலை: கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பா் 7-ஆம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினமும் கூட. இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு சீனிவாசனின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகிகளும் கலந்துகொள்கின்றனா்.
பாலசந்தருக்கு சிலை: அடுத்த நாளான 8-ஆம் தேதி காலை 9.30-க்கு சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலக குருவான இயக்குநா் கே.பாலசந்தரின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் பாலசந்தா் குடும்பத்தினா் கலந்து கொள்கின்றனா்.
மதியம் 3.30 மணிக்கு, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை சத்யம் திரையரங்கில் ‘ஹேராம்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. படம் முடிந்ததும், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் கமல் கலந்து கொண்டு பதிலளிக்கிறாா்.
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி: கமலின் 60 ஆண்டுகால கலைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நடக்கிறது.