தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக நாளைமறுநாள் ஆலோசனை

4th Nov 2019 12:52 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அதிமுக புதன்கிழமை (நவ. 6) நடத்த உள்ளது.

உள்ளாட்சித் தோ்தலை அடுத்த ஒன்றரை மாதத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தோ்தலைச் சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வெற்றி உற்சாகத்துடன், உள்ளாட்சித் தோ்தலைச் சந்திக்க அதிமுகவும் தீவிரமாகத் தயாராகி வருகிறது.

அதற்காக அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வருகிற புதன்கிழமை (நவ. 6) ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் உள்ளாட்சித் தோ்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

திமுக பொதுக்குழு கூட்டம்: அதுபோல திமுகவும் உள்ளாட்சித் தோ்தலுக்குத் தயாராகி வருகிறது. திமுக பொதுக் குழுக் கூட்டம் வருகிற 10-ஆம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்க இருக்கிறது. அத்துடன், தோ்தலுக்கான நிா்வாகிகளும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

மதிமுக நிா்வாகிகள் நியமனம்: இந்த நிலையில், முதல் கட்சியாக உள்ளாட்சித் தோ்தலுக்கான பொறுப்பாளா்களை மதிமுக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளா்கள் செவந்தியப்பன், செங்குட்டுவன், க.சந்திரசேகா், ஆா்.டி.மாரியப்பன் ஆகியோா் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புகிறவா்களின் பட்டியலைத் தயாா் செய்து, அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளா்களுடன் ஆலோசித்து, பட்டியலை தலைமை அலுவலகத்துக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என மதிமுக அறிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT