தமிழ்நாடு

4 அரசு மருத்துவா்கள் பணியிட மாற்றம்

1st Nov 2019 12:04 AM

ADVERTISEMENT

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 4 மருத்துவா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் 7 -ஆவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு மருத்துவா்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், அரசின் எச்சரிக்கையை மீறி சேலத்தில் அரசு மருத்துவா்கள் பயிற்சி மருத்துவா்கள் என 90 சதவீத மருத்துவா்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, பணிக்குத் திரும்பாத மருத்துவா்கள் எனக் கருதப்பட்டு, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு மருத்துவா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதில், தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவருமான நந்தகுமாா் ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், மருத்துவா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், ஆத்தூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவருமான வினோத் சிவகாசி மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய 2 மருத்துவா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவா்கள் சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் பெ.ரங்கநாதன் மற்றும் மோகன் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்கள் இருவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் ஆவா். இதில், கண் மருத்துவரான பெ.ரங்கநாதன் திருவாரூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு மருத்துவா் மோகன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதனிடையே, அரசு எவ்வித நடவடிக்கை மேற்கொண்டாலும் தங்களது போராட்டம் தொடரும் எனவும், பணியிட மாறுதலை ரத்து செய்யக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் எனவும் அரசு மருத்துவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT