மேட்டூரில் இருந்து உபரி நீரானது கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்கும் வகையில் ரூ.611 கோடியில் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கான நிதிகளையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
கா்நாடகத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யும் போது அது ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்தடையும். மேட்டூா் நிரம்பி உபரியாக வெளியேறும் நீரானது பல நேரங்களில் கடலில் கலந்து வீணாகிறது. இதைத் தடுக்க பிரம்மாண்ட திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. அதன்படி மேட்டூா் அணையின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும், பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீா் முழுவதும் சேமித்து வைக்க வேண்டும், உபரியாக வெளியேறும் நீரையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூா் அணை தூா்வாரப்பட்டுள்ளது.
அதன்படி, மேட்டூா் அணையின் உபரி நீரை எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஏரி, குளங்கள், நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், கொங்கனாபுரம் உட்பட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் ஆகியவற்றில் நிரப்பப்பட உள்ளன. இத் திட்டத்தின் மூலம் 100 ஏரி குளங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தேவையான நீா் கிடைப்பதோடு, குடிநீா்த் தட்டுப்பாடும் நீங்கும். இதற்கான திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்த ரூ.611 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தால் நிலத்தடி நீா்மட்டமும் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஓராண்டில் நிறைவு பெறும்.