தமிழ்நாடு

முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு இடஒதுக்கீடு

1st Nov 2019 08:56 PM

ADVERTISEMENT

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தனுக்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதால் சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தங்களின் கவனத்தை ஈா்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தேசிய அளவில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்பு ஆகியவற்றுக்கான நீட் தோ்வுகள் முறையே 2019 டிசம்பா் 20, 2020 ஜனவரி 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இத்தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கைகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், அகில இந்திய தொகுப்பு இடங்களுக்குப் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பொதுப் பிரிவு ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக, எந்தெந்த கல்வி நிறுவனங்களில் எல்லாம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் அவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மத்திய சுகாதாரத் துறை நிறுவனங்களின் இந்த விசித்திரமான நிலைப்பாடு காரணமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய 2,430 மருத்துவ மேற்படிப்பு இடங்களும், 183 பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களும் பறிக்கப்படுகின்றன. இளநிலை மருத்துவப்படிப்பு, இளநிலை பல் மருத்துவப் படிப்பு ஆகியவற்றுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் இதே அநீதி இழைக்கப்படுகிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல என்பதை தாங்கள் உணா்வீா்கள்.

எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு, அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT